உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்
பணிப்பாளர்,
மிஷ்காத் ஆய்வு நிறுவனம்
இன்றைய முஸ்லிம் சமூகத்தில் ஒரு நீண்டகால சிந்தனை முரண்பாடு நிலவுகிறது. ஒரு புறம் "மத்ரஸா கல்வி" மற்றொரு புறம் "பாடசாலை கல்வி". இதில் எது சிறந்தது, எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் பல பெற்றோர்களும் மாணவர்களும் இருக்கின்றனர்.
ஆனால், இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரிக்கும் செயற்பாடல்ல; அது ஒரு அறிவுபூர்வமான பயிற்றுவித்தல் செயற்பாடு. எனவே அந்தவகையில் அதுவோர் அமானிதமாக மாறுகிறது. கல்வியைப் பிரித்துப் பார்க்கும் நமது குறுகிய பார்வையை உடைத்து, அறிவின் அகலமான பரிமாணத்தை நாம் உணர வேண்டும்.
ஆசிரியர் பணி: ஒரு தூதுத்துவத்தின் தொடர்ச்சி
கல்வி கற்பித்தல் என்பது ஏதோ ஒரு சாதாரணத் தொழில் அல்ல. அது இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் நேரடி நீட்சியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை ஒரு ஆசிரியராகவே உலகிற்கு அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
"அல்லாஹ் என்னை மனிதர்கள் மீது கடுமையான விஷயங்களைச் சுமத்துபவனாகவோ அல்லது கடும் போக்கை கொண்டவனாகவோ அனுப்பவில்லை. மாற்றமாக, எளிமையான முறையைப் பின்பற்றுகின்ற ஒரு ஆசிரியனாகவே (முஅல்லிம்) என்னை அனுப்பினான்." (ஹதீஸ்)
இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள 'முஅல்லிமுல் ஹைர்' (நலனைப் போதிக்கும் ஆசிரியர்) என்ற சொல் மிக ஆழமானது.
இங்கே 'ஹைர்' (நன்மை/நலன்) என்பது வெறும் மார்க்க சட்டங்களை மட்டும் குறிக்கவில்லை; மனித குலத்திற்குப் பயன்படும் அனைத்து நல்ல கலைகளையும் குறிக்கிறது.
எனவே, கணக்கு, அறிவியல் அல்லது மொழி என எதனைக் கற்பித்தாலும், அது சமூகத்திற்கு நலன் பயக்கும் எனில், அந்த ஆசிரியர் இறைத்தூதரின் பணியையே செய்கிறார்.
"மார்க்கக் கல்வி vs உலகக் கல்வி" - உடைக்கப்பட வேண்டிய தவறான புரிதல்
கல்வியை "மார்க்கம்" மற்றும் "உலகம்" என இரண்டாகப் பிரிப்பது ஒரு தவறான மற்றும் ஆபத்தான அணுகுமுறையாகும்.
அறிஞர் யூசுப் அல்-கரளாவி அவர்கள் கூறுவது போல, "அறிவு என்பது மார்க்கம்; மார்க்கம் என்பது அறிவு". இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை.
இஸ்லாமியச் சட்டக் கலையின் ஒரு முக்கிய சட்ட விதியை நாம் கவனிக்க வேண்டும்:
"ஒரு கடமையை நிறைவேற்ற எது அவசியமோ, அதுவும் கடமையாகும்."
உதாரணத்திற்கு, ஒரு முஸ்லிம் சமூகம் தன் பாதுகாப்பிற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பிறரிடம் கையேந்தி நிற்கக் கூடாது என்பது மார்க்கக் கடமை எனில், அதற்குத் தேவையான மருத்துவம், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தைக் கற்பதும் ஒரு 'வாஜிப்' (மார்க்கக் கடமை) ஆகிறது.
வரலாற்றில் நாம் போற்றும் சஹாபாக்கள் அனைவரும் இன்றைய அர்த்தத்திலான 'ஷரீஆ' துறை அறிஞர்களாக இருக்கவில்லை:
காலித் இப்னு வலீத் (ரலி): இவர் மிகக் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். ஆனால் இராணுவத் துறையில் அவர் பெற்றிருந்த நிபுணத்துவம் அவரை அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவராக்கியது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி): இவரது பெரும் பங்களிப்பு பொருளாதாரத் துறையில் இருந்தது. அவர்கள் தத்தமது துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலமே மார்க்கத்தின் இருப்பைத் தக்கவைத்தனர்.
இயற்கையை அறிவது இறைவனை அறிவதே
விஞ்ஞானக் கல்வி என்பது உலகியல் சார்ந்ததல்ல, அதுவும் ஒரு மார்க்கக் கல்வியே. இதற்கு மிகச்சிறந்த ஆதாரம் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் வரலாறு.
ஆதம் (அலை) அவர்களை மலக்குகளை விட உயர்ந்த அந்தஸ்தில் அல்லாஹ் உயர்த்திப் பிடித்தது "வணக்க வழிபாடுகள்" (திக்ர், தஸ்பீஹ்) மூலம் அல்ல.
மாறாக, மலக்குகள் அறியாத "பொருட்களின் பெயர்களை" (மலைகள், மேகங்கள், தாவரங்கள், கடல்கள் போன்ற பௌதீக உலகின் அறிவு) அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தான். இந்த 'உலகியல்' அறிவின் மூலமே ஆதம் (அலை) மலக்குகளை வென்றார்கள்.
அறிவியல் அறிஞர் ஸஃலூல் நஜ்ஜார் குறிப்பிடுவது போல, குர்ஆனின் ஆறில் ஒரு பகுதி (ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள்) அறிவியல் மற்றும் இயற்கை நிகழ்வுகளைப் பேசுகிறது.
குர்ஆனில் (ஸூரத்துல் ஃபாதிர்) மலைகளின் நிறங்கள் மற்றும் உயிரியல் பற்றி விவரித்துவிட்டு, "அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் உலமாக்களே" என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கே 'உலமா' (அறிஞர்) என்பது இயற்கை மற்றும் பௌதீக உலகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளையும் உள்ளடக்கியே சொல்லப்பட்டுள்ளது.
அதுபோன்றே, அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபி அவர்கள், "தொழில்நுட்பம் வரலாற்று ஓட்டத்தை விரைவுபடுத்தும்" என்ற கருத்தை முன்வைக்கிறார்.
தொழில்நுட்பம் என்பது இஸ்லாமியத் தூதை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கான வாகனம். ஒரு மைக்ரோஃபோன் அல்லது இணையதளம் மூலம் ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைய முடியும். தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கும் சமூகம் வரலாற்றின் வேகத்தில் பின்தங்கிவிடும். ஆகவே, நவீன தொழில்நுட்பங்களைக் கற்பது என்பது மார்க்கப் பணியை விரைவுபடுத்துவதற்கான அத்தியாவசியத் தேவையாகும்.
ஆசிரியர்: அழியாத நன்மைகளின் ஊற்றுக்கண்
கற்பித்தல் என்பது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகளை வாரி வழங்கும் 'ஸதக்கத்துல் ஜாரியா' (நிலையான தர்மம்) ஆகும்.
"நல்லதைக் கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியருக்காக (முஅல்லிமுல் ஹைர்) கடலில் உள்ள மீன்கள் உட்பட அனைத்தும் பாவமன்னிப்புத் தேடுகின்றன." (ஹதீஸ்)
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் பொன்னான காலத்தைச் (6 வயது முதல் 18 வயது வரை) செதுக்குகிறார்கள்.
ஒரு கட்டிடத்தைக் கட்டுவதை விட ஒரு மனிதனை உருவாக்குவது மகத்தானது. ஒரு ஆசிரியர் உருவாக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையும், அவர் மரணித்த பின்னரும் அவரது கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும். அதே சமயம், இந்த அமானிதத்தில் துரோகம் இழைப்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம்.
மாற்றத்தை நோக்கிய திட்டமிடல்
இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கும் மேற்கத்திய அறிவுத் துறைக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது.
குறிப்பாக, உளவியல், பொருளாதாரம், மற்றும் அரசறிவியல் போன்ற துறைகளில் உயர்தர நிபுணத்துவமும் (PhD) ஆய்வுத் திறனும் கொண்ட அறிஞர்கள் நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளனர்.
வெறும் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் மட்டும் உருவாக்குவது நமது இலக்கல்ல; சமூகத்தின் ஆன்மாவையும் கட்டமைப்பையும் செதுக்கும் வல்லுநர்களை நாம் உருவாக்க வேண்டும்.
பாடசாலைக் கல்வியும் மதரஸாக் கல்வியும் ஒரு பறவையின் இரு சிறகுகளைப் போன்றவை. ஒரு சிறகை மட்டும் வைத்துக்கொண்டு பறவை பறக்க முடியாது.
எமது உடனடித் தேவை:
ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு கிராமமும் கல்வியில் தற்சார்பு அடையத் திட்டமிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும். மார்க்கக் கல்வியை வாழ்வியலோடும், வாழ்வியல் கல்வியை மார்க்கத்தோடும் இணைக்க வேண்டும். பாடசாலைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், நமது சமூகத்தின் மார்க்க இருப்பைத் தீர்மானிக்கும்.
இந்த 'அமானிதத்தை' உணர்ந்து செயல்படத் தயாரா?
இதன் PDF பெற விரும்புபவர்கள்
Type "Teaching" and Send WhatsApp
ஆசிரியம் ஒரு அமானிதம்
Full Video YouTube
https://youtu.be/lS5nVjEdCSE?si=LcsaaQlotjLN1_kF
நன்றி
விடிவெள்ளி