29 July 2026
Back to Articles
சிறுவர் உரிமைகள்: ஓர் இஸ்லாமியப் பார்வை
Tamil

சிறுவர் உரிமைகள்: ஓர் இஸ்லாமியப் பார்வை

Published: Jun 25, 2026

சிறுவர் உரிமைகள்: ஓர் இஸ்லாமியப் பார்வை

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்

பணிப்பாளர்,

மிஷ்காத் ஆய்வு நிறுவனம்

குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு; அதன் அடித்தளம் சிறுவர்கள் என்பது இஸ்லாத்தின் பார்வையாகும். இந்த வகையில் குடும்பம் என்பது தனிநபர்களை பிரசவிக்கும் இடம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் சிந்தனையையும் நம்பிக்கைகளையும் ஒழுக்கங்களையும் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை ஊடகமாகும். எனவே, குடும்பம் என்பது வெறும் தனிமனிதர்களின் தங்குமிடம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் அடிப்படை ஊடகமாகும். ஒரு நபர் கல்வி கற்கும் பாடசாலை, மதரஸா அல்லது அவர் செல்லும் பள்ளிவாசல் ஆகிய அனைத்துக்கும் முன்பாக, ஒரு குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கும் முதல் களமாக குடும்பமே அமைகிறது.

இந்நிலையில் மார்க்க சிந்தனைகள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் இந்த 'ஊடகம்' சிதைந்து போனால், ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பும் அதன் தொடர்ச்சியை இழந்துவிடும். எதிர்கால சமூகம் என்பது இன்று நமது குடும்பங்களில் வளரும் குழந்தைகளே என்பதை உணர்ந்து, அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை நாம் ஆழமாகப் பயில்வது சமகாலத்தை பொறுத்தவரை கட்டாயமானது

இஸ்லாத்தில் திருமணத்திற்கு முன்பே தொடங்கும் குழந்தைகளின் உரிமை

சிறுவர் உரிமைகள் என்பது ஒரு குழந்தை பூமிக்கு வந்த பிறகு ஆரம்பமாவதல்ல; மாறாக, அக்குழந்தையின் ஓர் ஆண் தனது மனைவியை அல்லது ஒரு பெண் தனது கணவனைத் தேர்ந்தெடுக்கும் போதே அது தொடங்கிவிடுகிறது.

இஸ்லாமிய சட்டவியலின் படி, ஒரு நபர் தனது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது, உண்மையில் தனது வருங்காலக் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தாய் அல்லது தந்தையைத் தேர்ந்தெடுப்பதாகும். இதுவே ஒரு குழந்தையின் முதல் அடிப்படை உரிமையாகும்.

பெற்றோரின் ஒழுக்கம், அறிவுப் பின்னணி மற்றும் ஆன்மீகத் தகுதிகள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. எனவே, திருமணத் தெரிவின் போதே "எனது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பெற்றோரைத் தேர்ந்தெடுக்கிறேன்" என்ற உயரிய பொறுப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

"நான் எனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயைத் தெரிவு செய்கிறேன்" அல்லது "எனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையைத் தெரிவு செய்கிறேன்" என்ற விழிப்புணர்வுடனான சிந்தனையே ஒரு திருமண பந்தத்தின் முதல் அத்திவாரமாக இருக்க வேண்டும் என ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

பிறப்பதற்கு முன்னர் கருவில் இருக்கும் உயிருக்கான உரிமைகள்

வயிற்றில் இருக்கும் சிசுவை ஒரு முழுமையான உயிருள்ள மனிதனாகக் கருதும் இஸ்லாம், அதற்குப் பல்வேறு சட்டப் பாதுகாப்புகளை வழங்குகிறது:

01. தாயைப் பராமரித்தல்: கர்ப்பிணித் தாயை உடல் மற்றும் மன ரீதியாகக் கவனிப்பது கணவனின் முதன்மையான கடமையாகும். விவாகரத்து நிகழ்ந்திருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் வரை அந்தத் தாய்க்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் பொருளாதாரச் செலவுகளைத் தந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

02. வணக்க வழிபாடுகளில் சலுகை: நோன்பு நோற்பதால் கருவில் இருக்கும் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர் உறுதிப்படுத்தினால், அந்தத் தாய் நோன்பு நோற்காமலிருக்க மார்க்கம் அனுமதி அளிக்கிறது.

03. தண்டனை நிறுத்திவைப்பு: ஒரு பெண் தண்டனைக்குரிய குற்றம் செய்திருந்தாலும், அவர் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், குழந்தை பிறக்கும் வரை அத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது என இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.

04. கருக்கலைப்பு தடை செய்யப்படல்: சிசு உருவாகத் தொடங்கியதில் இருந்தே அதைக் கலைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிசுவின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப இக்குற்றத்தின் தரம் உயர்ந்து செல்லும். அந்த வகையில் ஆன்மா ஊதப்பட்டு விட்டால் கருவைக் கலைப்பது ஒரு 'கொலையாகவே' அமைந்துவிடுகிறது. ஆன்மா ஊதப்படுவது 42 நாட்களா அல்லது நான்கு மாதங்களா என்ற கருத்து வேறுபாடு உள்ளமையை இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

04. பாதிப்புக்கான நஷ்டயீடு: திட்டமிட்டோ அல்லது தவறுதலாகவோ ஒரு சிசுவின் மீது பாதிப்பு ஏற்படுத்தப்பட்டால் அல்லது அதனை இறக்கும் நிலைக்கு உட்படுத்தினால், அதற்காகச் சம்பந்தப்பட்டவர் நஷ்டயீடு வழங்க வேண்டும் என இஸ்லாமிய சட்டம் கூறுகிறது.

05. கர்ப்பவறைக் குழந்தையும் வாரிசுச் சொத்துரிமையும்: இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் கர்ப்பவறையில் இருக்கும் குழந்தையின் பொருளாதாரப் பாதுகாப்பை வியக்கத்தக்க வகையில் உறுதி செய்கிறது. ஒரு குடும்பத்தில் சொத்துப் பகிர்வு நடக்கும்போது, அக்குடும்பத்தை சேர்ந்த பெண் கர்ப்பமாக இருந்தால், இன்னும் பிறக்காத அக்குழந்தைக்கும் அதற்குரிய பங்கை ஒதுக்கி வைப்பது கட்டாயமாகும். இவ்வாறு ஒரு மனித உயிர் உலகிற்கு வருவதற்கு முன்பே, அதன் உரிமையை இஸ்லாம் நிலைநாட்டுகிறது.

இதே பின்னணியில் தான், 'சுவீகாரப் புத்திர முறை' (தத்தெடுத்தல்) இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது ஹராமான - தடுக்கப்பட்ட செயற்பாடாகும். ஏனெனில், இது உண்மையான இரத்த உறவு முறையைப் பாதித்து போலி உறவுகள் தோன்றக் காரணமாகும். அத்தோடு உறவினர்களது வாரிசுச் சொத்திலும் ஏனைய உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறந்ததன் பிறகான உரிமைகள்

01. பால்குடி: பிறந்த குழந்தையின் பால்குடி தொடர்பாக கீழ்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

i. பால்குடி உரிமை: ஒரு தாய் தனது குழந்தைக்கு இரண்டு முழு ஆண்டுகள் பால்குடி வழங்குவது மார்க்க ரீதியான கடமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், இதை ஒரு சட்ட ரீதியான கடமையாக மாலிகி மத்ஹப் கருதுகிறது. ஏனைய மத்ஹபுகள் இது 'அன்பும் கருணையும்' சார்ந்தது என்பதால் சட்ட ரீதியான அதிகாரக் கெடுபிடிகளுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை எனக் கருதுகின்றன.

ii. பால்குடிக்கான கூலி: தம்பதிகள் விவாகரத்து பெற்றிருந்தால், குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்க்குத் தந்தை அதற்கான கூலியை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமிய வழிகாட்டலாகும். காரணம், இங்கு குழந்தையின் நலன் முன்னுரிமையாக்கப்படுகிறது.

02. அரவணைத்து வளர்த்தல் (ஹளானா): பருவ வயதை அடையும் வரை குழந்தையை அரவணைத்து வளர்க்கும் உரிமை முதன்மையாகத் தாய்க்கும், அவர் சார்ந்த பெண் உறவினர்களுக்குமே (தாய்வழிப் பாட்டி, சகோதரிகள்) வழங்கப்படுகிறது.

03. செலவுக்கான பொறுப்பு: குழந்தையை வளர்க்கும் உரிமை தாயைச் சார்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டாலும், அதற்கான முழுப் பொருளாதாரச் செலவுகளையும் ஏற்கும் கடமை தந்தையினுடையது.

04. அநாதைச் சிறுவர்களின் சொத்துக்களுக்கும் வளர்ப்புக்குமான பொறுப்பு: தந்தை இல்லாத நிலையில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க 'விலாயா' என்ற சட்ட ஒழுங்கை இஸ்லாம் வகுத்துள்ளது. "விலாயா" என்பது சிறுவர்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களை அறிவு, ஒழுக்கம், ஆன்மீக ரீதியாக வளர்ப்பதற்கும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

அதேவேளை, ஒருவர் தனது மரண சாசனத்தில் தனது பிள்ளைகளின் ஒழுக்க மேம்பாட்டிற்கும் மற்றும் சொத்துப் பராமரிப்புக்கும் தகுதியான ஒருவரை நியமிப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவ்வாறு, ஒருவர் மரணிக்கும் முன்பே தனது பிள்ளைகளின் சொத்து மற்றும் வளர்ப்புப் பொறுப்பை ஒரு தகுதியான நபரிடம் ஒப்படைப்பதை "வஸி" என்ற பதம் குறிக்கிறது.

இதன் போது, அநாதைச் சிறுவர்களின் சொத்தைப் பராமரிக்கும் பாதுகாவலர் வசதி படைத்தவராக இருந்தால், அநாதையின் சொத்திலிருந்து எவ்வித கூலியும் பெறக்கூடாது. அவர் வசதியற்றவராக இருந்தால், தனது தேவைக்காக மட்டும் மிகக் குறைந்த அல்லது நியாயமான அளவு ஊதியம் பெற்றுக் கொள்ளலாம் எனச் சூரத்துன் நிஸா கூறுகிறது.

சுருக்கமாக கூறுகையில், சிறுவர் உரிமைகள் என்பவை அவர்கள் பிறந்த பிறகு தொடங்குவது அல்ல; மாறாக அவர்கள் பிறப்பதற்கு முன்பே, ஒரு தகுதியான பெற்றோரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்தே தொடங்கிவிடுகிறது. கர்ப்பவறைக்குள் உள்ள குழந்தைக்கு வாரிசுரிமை முதல், பால்குடி வழங்கும் தாய்க்குத் தந்தை வழங்க வேண்டிய கூலி வரை இஸ்லாம் கூறும் சட்டங்கள் யாவும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

இப்பின்னணியில், ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் மேலே விளக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு சம்பந்தமான இஸ்லாத்தின் வழிகாட்டல்களை எமது சமூகம் எவ்வளவு தூரம் பின்பற்றி நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்து சிந்திக்க நாம் கடமைப்படுகிறோம்.

Full Video Podcast Discussion